கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு கடந்த 17-ம் தேதி, பள்ளி வளாகம் அருகே நடைபெற்ற போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறிப்போனது. பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்த இந்த பயங்கர கலவர சம்பவம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பள்ளி நிர்வாகம் தரப்பில் தாளாளர் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மாணவியின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் நூற்றுக்கணக்கான நபர்களின்மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல்துறை. நீதி கேட்டு மாணவியின் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன் வைத்ததோடு, மாணவியின் மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்.பி- செல்வக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 6 டி.எஸ்.பி-க்கள்., 9 காவல் ஆய்வாளர்கள், 3 சைபர் க்ரைம் அதிகாரிகள் என 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் வரை மாணவியின் பிரேத உடலை வாங்காமல் போராடி வருகின்றனர் பெற்றோர் தரப்பினர்.
இந்நிலையில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர், இன்று (21.07.2022) கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்திருந்தனர். மாணவியின் இறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டவர்கள்… கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி, “தனியார் பள்ளி வளாகத்தில் இயங்கிவந்த விடுதி, உரிய அனுமதி பெறாமல் இயங்கியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், அப்படி அனுமதி பெறாமல் நடத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியர் அவர்கள், 3 மாதத்திற்கு முன்பாகவே `அனுமதி இல்லாமல் தனியார் பள்ளியில் விடுதி நடத்துபவர்கள், அனுமதி பெற உடனே விண்ணப்பிக்க வேண்டும். கட்டாயம் அனுமதி வாங்க வேண்டும்’ என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த தனியார் பள்ளியில் உள்ள விடுதி அனுமதி இல்லாமல் இயங்கியதை கண்டறிந்துள்ளோம். இது தண்டனைக்கு உரிய குற்றமாகும். இதற்கு முன்பு அந்த பள்ளியில் மர்மான முறையில் மாணவர்கள் இறந்துள்ளதாக இதுவரை எந்த ஒரு புகாரும் ஆணையத்திற்கு வரவில்லை. இதற்கு பின்பு புகார் தெரிவித்தால் அதன்மீது விசாரணை நடைபெறும்” என்றார்.