கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாணவி பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜூலை 17 அன்று நடந்த போரட்டத்தில் அதிகளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சூறையாடினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே மாணவி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் மறு உடல் கூறாய்வு நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் குழுவை நியமித்து, மாணவியின் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடல்கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன் ஆகியோர் முன்னிலையில், செவ்வாய்கிழமை மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு செய்யப்பட்டது.
இதற்கிடையே, மறுபிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க கோரி, மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெற்றோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று இரவே உடல் அடக்கம் செய்யப்படும் என மாணவி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“