கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என இன்று ஆய்வு செய்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், அதனால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கடந்த ஒரு வாரமாக காவல்துறை யினர், கல்வித்துறையினர், சிபிசிஐடி, சிறப்பு குழுவினர் என பல தரப்பினர் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், இன்று ஆய்வு மேற்கொண்ட மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி, விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி கடந்த வாரம் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த போராட்டம் கடந்த வாரம் ஞாயிறன்று வன்முறையாக மாறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக சர்ச்சைகள், வழக்குகள் உள்ளதால், மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மாணவி இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி இன்று விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார். முறையான அனுமதி பெறாத விடுதியில் 24 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி பள்ளி விடுதி இயங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என கூறினார். மேலும், முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும். எந்த வழக்காக இருந்தாலும், சிறார்களின் புகைப்படம், பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அந்த மாவட்டத்தில் முதலிடம் பிடித்து வரும் பள்ளி என்பதும், அங்கு விடுதிகள் செயல்பட்டு வருவதும், அந்நிறுவமேன விளம்பரங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். மாவட்ட கல்வித்துறைக்கும் தெரியும். ஆனால், தற்போது திடீரென கள்ளக்குறிச்சி பள்ளி, விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்று மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளது புதுமையாகத்தான் உள்ளது.
இந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் உள்பட எந்தவொரு துறையினருக்கும் தெரியாமல் போனது விந்தையாகத் தான் உள்ளது. கடந்த ஒரு வாரமாக காவல்துறை மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள், சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வு குழுக்கள் என பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்கள் யாரும் தெரிவிக்காத ஒரு குற்றச்சாட்டை குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி சொல்லி இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பதை தமிழகஅரசு விருப்புவெறுப்பின்றி தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.