கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக, கல்லூரி மாணவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பரவியுள்ளது.
குறிப்பாக அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி மற்றும் கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிகளில் போராட்டம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அந்தக் கல்லூரிகள் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களை உரிய அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே கல்லூரிக்குள் போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக தவறான தகவல்களை பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சில தினங்களுக்கு முன் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் உட்பட நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தரப்பிலும், யாராவது தவறான பரப்புரை மேற்கொண்டால் அவர்களின் ஃபேஸ்புக் , யூ-ட்யூப் பக்கங்கள் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM