கிளிநொச்சி மாவட்ட மக்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டையை கிராம அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஊடாக கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன
அதனை கிராம அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்றையதினம் (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக எரிபொருள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் வழங்கலுக்கான QR Code நடைமுறைகளையும் மக்கள் பின்பற்றுவதன் ஊடாக பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளவும் எரிபொருள் வழங்கலை கிரமமான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.
இதேவேளை மாவட்டத்தில் சிறுபோக அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எரிபொருளானது முன்னுரிமை அடிப்படையில் விவசாய அமைப்புக்களினாலும் கமநல அபிவிருத்தி சேவை நிலையத்தினாலும் சிபாரிசுசெய்யப்பட்டு பிரதேச செயலரின் அங்கீகாரத்தோடு விவசாயிகளுக்கான எரிபொருள் அட்டையின் ஊடாக வழங்கப்படும்.
பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருளானது அறுவடைக்காக காத்திருக்கின்ற விவசாயிகளுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.