புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இதற்கான தேர்தல் கடந்த 18-ம்தேதி நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நிலவரம் அவ்வப்போது அறிவிக்கப்படும். மாலை வாக்கில் இறுதிமுடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர் வரும் 25-ம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.