குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக விரைவில் இது தொடர்பாக பரீசீலனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், குட்காவை தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து இந்த குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நவம்பர் மாதம் 2017ம் ஆண்டு அன்று போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் நடந்த வருமானவரித் துறை சோதனையின்போது, குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய டிஜிபி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது என தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி-க்கள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு தற்போது கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும் சிபிஐ இந்த வழக்கில் அதிரடி வேகம் காட்டும் என தெரிகிறது.
ஏற்கெனவே குட்கா ஊழல் தொடர்பாக, அமலாக்கத் துறையினரும் தனியாக வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட சிலரின் ரூ.246 கோடி சொத்துகளை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.