போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனடியாக பணி நீக்கம் செய்து, உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வலியுறுத்தியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, முருகானந்தம், கார்த்தியாயினி, சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், தமிழ்நாட்டில் நடைபெறும் தேச விரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகவும், தேச விரோத செயல்கள், தமிழ்நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதாகவும், தீவிரவாதிகளுக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
“ விமானப்படை தளபதி வீட்டு முகவரியிலேயே போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேல் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 72 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் போன்ற தவறான அதிகாரிகள் உளவுத்துறையில் இருப்பதால்தான் போலி பாஸ்போர்ட், கள்ளக்குறிச்சி கலவரம் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனடியாக பணி நீக்கம் செய்து, அவரை விசாரிக்க வேண்டும். ஆதாரப்பூர்வமாக புகார் மனு அளித்துள்ள நிலையில், ஆளுநர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
தமிழ்நாடு தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியிருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடைபெற்று முடிந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் என்பது நிர்வாக ரீதியிலான மாற்றம் மட்டுமே என்றும் தவறு செய்த அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருவதாகவும், ஒழுங்கற்றவர்களை தலைமை பீடத்தில் வைத்திருப்பது தான் தவறுகளுக்கு காரணம் என்றும் கே.பி.ராமலிங்கம் பேசினார்.
இதையும் படிக்கலாம்: அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருட்கள் என்னென்ன? தயாராகிறது பட்டியல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM