அமிர்தசரஸ்: கடந்த மே மாதம் பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலா, மான்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில். பிஷ்னோய் கூட்டாளிகள் 2 பேர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பக்னா பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் மறைந்திருந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து போலீஸாரும் பதிலுக்கு சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் ஜக்ரூப் சிங் ரூபா, மன்பிரீத் சிங் (எ) மன்னு குஸ்ஸா ஆகியோர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த கேமராமேன் ஒருவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.