கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் கிராமத்தில் இருக்கும் தனியார்ப் பள்ளியில் +2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், அது கொலை என்றும் அதற்கு நீதி வேண்டும் என்று கூறி கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பேருந்துகளும், வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த கலவரத்துக்கிடையே கனியாமூர் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்களின் இருக்கைகள், மின் விசிறிகள், ஏர் கூலர், ஏ.சி, கம்ப்யூட்டர் போன்றவற்றுடன் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் தூக்கிச் சென்றனர்.
அந்த புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானதுடன், நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்தியாகவும் வெளியானது. மாணவியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளியிலிருந்து பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்றும் அதனால் எடுத்துச் சென்ற பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் அடிப்படையில், கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடு, மாடு, கோழிகளை பள்ளியில் ஒப்படைக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிராம மக்களுக்கு தண்டோரா போடப்பட்டது.