கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரது வீட்டில் வருவாய்த் துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதற்கிடையில், பெற்றோர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று (ஜூலை 21) விசாரணை நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் 16 வயதான மகள், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதிக் கட்டிட மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து, தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதற்கிடையில், பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது.
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், மறு பிரேதப் பரிசோதனையில் பங்கேற்க மாட்டோம், மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரணைக் குழு முன்னிலையில், தமிழக அரசின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு பிரேதப் பரிசோதனையை முடித்தனர். தொடர்ந்து, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜயபிரபாகரன் நேற்று முன்தினம் நள்ளிரவு மாணவியின் வீட்டில் தகவல் அளிக்கச் சென்றார்.
அப்போதும், உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறு பிரேதப் பரிசோனை செய்யப்பட்ட விவரத்தை, அங்கு நோட்டீஸாக ஒட்டினர்.
நேற்று வரை மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் முன்வரவில்லை. மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு, மாவட்ட காவல் துறையினர் பெற்றோரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தரப்பு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முயற்சிக்கிறோம்
கள்ளக்குறிச்சியில் நேற்று புதிதாகப் பொறுப்பேறற காவல் கண்காணிப்பாளர் பகவலன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெற்றோருக்கு மகள் மரணம் தொடர்பாக மனக்குறை இருக்கும். அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. எனினும், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து பெற்றோரிடம் பேசி வருகிறோம். மாணவியின் உடலை நல்லடக்கம் செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம்” என்றார்.