இந்தியா-சீனா எல்லை பிர்ச்சினைகளுக்கிடையே, சிக்கிம், அருணாச்சலப்பிரதேச மாநிலங்களின் எல்லையை ஓட்டிய அசல் கட்டுப்பாட்டு எல்லை கோட்டுக்கு மிக அருகில் புதியதாக நீண்ட தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை சீனா அமல்படுத்த உள்ளது. சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திபெத்தில் உள்ள லுன்சே மாவட்டத்தில் இருந்து கஷ்கரில் உள்ள மஸா என்ற இடம் வரையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் 4,61,000 கி.மீ., நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைப்பதை நோக்கமாக கொண்ட 345 கட்டுமான திட்டங்களுள் ஒன்றாக சீனா இதனை செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இந்த சாலையை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட திட்டத்தின் கீழ், G695 எனப்படும் அந்த நெடுஞ்சாலை சிக்கம் மாநிலம் மற்றும் நேபாளத்தின் வழியாகவும் செல்லும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்த தகவல் தொடர்பாக இந்திய தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித எதிர்வினையும் ஆற்றப்படவில்லை. ஆனால், எல்லையில் அரங்கேறும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய – சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இதையடுத்து, எல்லை பிரச்சினை தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இதுவரை 16 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சரச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் போன்ற அத்துமீறல் செயல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பான்காங் ஏரி பகுதியில் 2 பெரிய பாலங்களையும் அந்நாடு அமைத்துள்ளது.