சோனியாவிடம் விசாரணை, விலைவாசி உயர்வு எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவையில் கேள்வி நேரம் நடந்தது

புதுடெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையின் விசாரணையை கண்டித்து காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியதில் இருந்தே, விலைவாசி உயர்வு, அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது ஆகியவற்றை கண்டித்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால், தொடர்ந்து 3 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங். தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதை கண்டித்து, மக்களவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், காலை 11.30 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?. காங்கிரஸ் தலைவர் என்பதால் சோனியா காந்தி மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டவரா?’ என்று கேட்டார்.பின்னர், மதியம் 2.15 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், ‘அன்டார்டிகா தொடர்பான முக்கியமான மசோதா கொண்டு வரப்படுகிறது. இது, மிக முக்கியமான மசோதா. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே மசோதாவை பரிசீலனை செய்ய முடியும்,’ என்றார். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த பர்த்துருஹரி மகதாப் (பிஜேடி), ‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிக குறைவாகவே அவையில் உள்ளனர். இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுகிறது,’ என்று அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாக்கூர், அமலாக்கத்துறையை  ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி ஒத்திவைப்பு  தீர்மானம் கொடுத்தார். மாநிலங்களவையும் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 3 நாட்கள் எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது. 4வது நாளான நேற்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பி.க்கள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி பிரச்னைகளை எழுப்பினர். இதனால், அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர். 12 மணிக்கு கேள்வி நேரம் துவங்கியது. இதில் வாய்மொழியாக உறுப்பினர்கள் கேட்ட 15 கேள்விகள் பட்டியலிப்பட்டன. அதில், 13 கேள்விகள் அவையில் எடுத்து கொள்ளப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.