மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி சண்டிகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள்மீதான ஜி.எஸ்.டி வரி தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அரிசி, தயிர், மோர், லஸ்லி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கு 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பேக்கிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், பன்னீர் போன்ற பல்வேறு பொருள்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பால் பொருள்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதால், ஆவின் பால் பொருள்கள் இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன்படி ஆவின் தயிர் 100 கிராமின் விலை 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், 1 கிலோ ரூ.100-லிருந்து 120 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே போல, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535-லிருந்து 580 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.