டெல்லி: ஜேஇஇ முதன்மை அமர்வு 2 தேர்வு ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்றுமுதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ (JEE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். இரண்டு நிலைகாக, அதாவது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, ஏற்கனவே ஜேஇஇ முதல் கட்டத் தோ்வுகள் ஜூன் 23 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து ஜேஇஇ இரண்டாம் கட்ட நுழைவு தேர்வு இன்று (21ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தேர்வு திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, ஜேஇஇ மெயின் தேர்வு2 வரும் 25ந்தேதி நடைபெறும் என அறிவித்து உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டை (Hall Ticket) வியாழக்கிழமை இன்று முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.