சென்னை: உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்துறை செயலர்கே.பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு திரும்பி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.ஏ.செந்தில்வேலன், உளவுத்துறை ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த என்.இசட்.ஆசியம்மாள் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பூக்கடை துணை ஆணையர் எஸ்.மகேஸ்வரன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பாளராகவும், சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) ஆல்பர்ட் ஜான் பூக்கடை துணை ஆணையராகவும், ஆவடி சிறப்பு காவல்படை ஐந்தாவது பட்டாலியன் கமான்டன்ட் எஸ்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர்.
மேலும், சென்னை சைபர் கிரைம் செல் துணை ஆணையர் தேஸ்முக் சேகர் சஞ்சய் திருவல்லிக்கேணி துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளர் டி.கண்ணன் சென்னை காவல் நவீனமயமாக்கம் ஏஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு
வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமே சிங் மீனா கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10-வது பட்டாலியன் கமான்டன்ட் ஆகவும், மதுராந்தகம் உதவிகாவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி பதவி உயர்வுபெற்று, சென்னை சைபர் கிரைம் செல் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பவானி உதவி காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பதவி உயர்வு பெற்று ஆவடி சிறப்பு காவல்படை ஐந்தாவது பட்டாலியன் கமான்டன்ட்டாகவும், கோட்டகுப்பம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பதவி உயர்வு பெற்று, சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும், திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் விவி சாய் பிரனீத் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.