குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கரை நிறுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.
எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது, மாநிலத்தை மதிப்பை குறைக்க முயன்ற ஜக்தீப் தன்கரை நாங்கள் ஆதரிக்க முடியாது. கருத்தியல் ரீதியாக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது.” என்று கூறினார்.
மறுபுறம், எதிர்க்கட்சிகள் வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவைத் தேர்ந்தெடுத்தன. ஆனால், அவர்கள் வேட்பாளரை தேர்வு செய்த விதம் சரியாக இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்பிக்கள் இருக்கும் போது, மம்தா பானர்ஜி போன்ற மூத்த தலைவர்களை கலந்தாலோசிக்காமல் வேட்பாளரை முடிவு செய்தனர். எனவே, 85% எம்.பி.க்களின் கருத்தைப் பெற்ற பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தோம் என்று அபிஷேக் தெரிவித்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை பாஜகவுக்கு உதவும் என்ற கருத்தை அபிஷேக் பானர்ஜி நிராகரித்தார்.
“குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நாங்கள் ஒதுங்கி இருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படாது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே சென்றுள்ளோம். மேலும், பாஜகவுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடும் ஒரே கட்சி நாங்கள்தான்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”