'தேர்தலில் வெற்றிப்பெற கூப்பனும் பணமும் முக்கியம்.. ஆனால்' – நத்தம் விஸ்வநாதன் பேச்சு

“வரும் காலங்களில் தேர்தலில் வெற்றி பெற கூப்பன்கள் மற்றும் பணம் வழங்குதல் முக்கியம்தான். ஆனாலும் பணம் மட்டுமே வெற்றியை தேடி தராது” என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசிய சர்ச்சை பேசால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டமாகும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
image
இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், “தற்பொழுது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் 99.9 சதவீதம் பேர் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 0.1 சதவீதம் பேர்தான் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக மீதம் இருக்கின்றனர். தேர்தல் சமயத்தில் மக்களிடம் கூப்பன் தருவது, பணம் வழங்குவது போன்றவையெல்லாம் முக்கியம்தான். ஆனால் பணம் என்பது வெற்றிக்கு இரண்டாவது தேவைதான். நிர்வாகிகள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். மேலும் இன்றைக்கு மக்கள் எடப்பாடியாரை நம்பத் தொடங்கி விட்டனர். நம்மிடம் இருந்த ஒரே தடைகல், நம்மை விட்டு நீங்கி விட்டது.
image
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு முடியாமல் போனதற்கு ஒரு சில காரணங்கள் இருந்தாலும், அதில் ஒரு காரணம் நம் தோளில் உட்கார்ந்து கொண்டு தலைமை ஏற்றுக்கொண்டு கழகத்தில் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டு கழகத்திற்காகவே குழி பறித்த நபரான ஓபிஎஸ்தான். இன்று அவரை நாம் அனைவரும் கழகத்தை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறோம். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு எந்த காலத்திலும் விசுவாசமாக இருந்ததில்லை. எங்கே இருக்கிறாரோ அதற்கு எதிராகத்தான் செயல்படுவார். தாம் இருக்கும் இடத்தில் இருந்து எதிராளிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்பவர் தான் ஓ பன்னீர்செல்வம். சசிகலா அவர்களை நாம் எதிர்த்த போது அவரிடம் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்வது, அதேபோல அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவுடன் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்வது ஆகியவைதான் அவருடைய பாணி” என்றார்.
image
அவரைத்தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதிமுக பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன், “ஓபிஎஸ், தான் மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன் என்கிறார். நல்ல விஷயம் தான். நம்முடைய நாட்டில், எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் என்பவர் இருப்பார். மாவட்ட ஆட்சியர் இல்லாத நேரங்களில் அவர் தனது பணிகளை வருவாய் அலுவலரை மேற்கொள்ளுமாறு அறிவித்துச் செல்வார். ஆனால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வந்தவுடன் அவர்தான் அவருக்கான பொறுப்பினை வகிக்க முடியும். வருவாய் அலுவலர் போய், `நான் தான் மாவட்ட ஆட்சியர்’ என தெரிவிக்க முடியாது.
image
முறையான ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மட்டுமே. அவர் மட்டுமே அந்த பணியை மேற்கொள்ள முடியும். அதுபோலதான் ஓ பன்னீர் செல்வத்தை, ஜெயலலிதா மூன்று முறை முதலமைச்சர் ஆக்கினார். அதை உணராமல் இப்போது வந்து `என்னை அனைவரும் வந்து வணங்குங்கள்’ என தெரிவிப்பது மிகவும் ஒரு மோசமான செயல்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.