“தேர்தல் கமிஷனில் செல்வாக்கை நிரூபிக்க 50 லட்சம் ஆதரவாளர்கள்!"- பட்டியல் தயாரிக்கும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு கட்சியில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் உத்தவ் தாக்கரேவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்பது உட்பட 5 மனுக்களை உத்தவ் தாக்கரே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டேவும் இது தொடர்பாக மனு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார்.

இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணையின்போது ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “20 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக்கூட உத்தவ் தாக்கரேவால் திரட்ட முடியவில்லை” என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் இந்த வழக்கில் பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யவேண்டியிருப்பதால் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதோடு இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதனால் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனாவாக சபாநாயகர் அங்கீகரித்திருக்கிறார்.

உத்தவ் தாக்கரே

இதே போன்று மொத்தமிருக்கும் 19 எம்.பி-க்களில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஷிண்டே அணியை மக்களவை சபாநாயகரும் அங்கீகரித்திருக்கிறார். எனவே ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்றும், தங்கள் அணிக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும் கோரி தேர்தல் கமிஷனில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

தேவேந்திர பட்நவிஸ், ஏக்நாத் ஷிண்டே

எம்.எல்.ஏ, எம்.பி-க்களில் அதிகமானோர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வேலையில் உத்தவ் தாக்கரே ஈடுபட்டிருக்கிறார். இதற்காக, “கட்சித் தொண்டர்கள் 50 லட்சம் பேரின் பட்டியலை அடுத்த சில நாள்களில் தயாரிக்க வேண்டும்” என மாவட்டத் தலைவர்களுக்கு உத்தவ் தாக்ரே உத்தரவிட்டிருக்கிறார்.

ஷிண்டே அணி கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் தங்களுக்கு முழு ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக உத்தவ் தாக்கரே இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர், “சிவசேனாவுக்கு ஏற்கெனவே முதன்மை உறுப்பினர்கள் 36 லட்சம் பேர் இருக்கின்றனர். கட்சியில் தொண்டர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரிக்கப்படும். இது தொடர்பாக மாவட்டத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே கூட்டியிருந்தார். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, “இப்போது அவர்கள் அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள். எப்போது இவர்கள் தேவையில்லை என்று பா.ஜ.க கருதுகிறதோ அப்போது அவர்களை தூக்கி எறிந்துவிடுவார்கள்.

நாம் இப்போது மாநில அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலைப்படாமல், தொண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வேலையில் ஈடுபட்டு கட்சியை வலுப்படுத்தவேண்டும். அதற்கு இதுவே சரியான நேரம்” என்றார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைத்தது, எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் ஒன்றாம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை முடிவு தெரிந்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய ஏக்நாத் ஷிண்டேவும் தரப்பும், பா.ஜ.க-வும் திட்டமிட்டிருக்கின்றன. இதனால் அமைச்சர் பதவியைப் பெற எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.