புதுடெல்லி: நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை தீர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று திமுக எம்பி. தயாநிதி மாறன் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய மின்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.அதன் விவரம் பின்வருமாறு:* நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடியில், நிலக்கரி பற்றாக்குறையின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு அல்லது அறிக்கை தயாரித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். * அப்படியானால், உள்நாட்டு நிலக்கரி இருப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுடன் அதன் விவரங்கள் என்ன என்பதை தெரியப்படுத்தவும். * ஏப்ரல் மாதத்தில் இருந்து மின்உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைதானா? அப்படியானால், நாட்டில் உள்ள பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் தற்போதைய நிலக்கரி இருப்பு விவரங்களை தெரியப்படுத்தவும். * அதிக விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய தயங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, உள்நாட்டு நிலக்கரி வினியோகத்தை குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைதானா? அப்படியானால், அது குறித்த விவரங்களை தெரியப்படுத்தவும்.* நிலக்கரி பற்றாக்குறை மற்றும் மின் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரங்கள் மற்றும் அம்மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.