டெல்லி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய மாணவியின் தந்தை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி இறந்தார்.மர்மமான முறையில் இறந்த சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற் கூறாய்வு நடத்தும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த குழுவில் தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவரையும் சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் முறையிடப்பட்டது. மேலும் மறு பிரேத பரிசோதனையை நிறுத்தவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவியின் உடற்கூறாய்வுக்கு தடை இல்லை என உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவியின் தந்தை தொடர்ந்த மனு இன்று நீதிபதிகள் கவாய் மற்றும் PS நரசிம்மா அமர்வில்இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு , ‘எனது மகள் சாவில் மர்மம் இருக்கிறது. உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அரசு அமைத்த மருத்துவர்கள் குழுவில் நம்பிக்கை இல்லை. உரிய, நியாயமான விசாரணையை தமிழக அரசு செய்யவில்லை. எனவே உச்சநீதிமன்றம் தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்,’என்று வாதிடப்பட்டது. தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ‘உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 2வது முறையாக மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் தகவலும் பெற்றோருக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாணவியின் உடலை பெறாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்,’என்றார். தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ‘நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும்.உயர்நீதிமன்றம் நியமித்துள்ள மருத்துவர்களை நீங்கள் எப்படி குறைகூற முடியும்.உயர்நீதிமன்றத்தில் முறையிட வேண்டியது தானே.மனுவை தள்ளுபடி செய்கிறோம்,’என்று தெரிவித்தனர்.