புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த 1938ம் ஆண்டு ஜவகர்லால் நேரு மற்றும் 5 ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனம். சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரசின் குரலாக ஒலித்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடி கடன் சுமையால் மூடப்பட்டது. இந்நிலையில், இந்த நிறுவனம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனம் மூலம், 2010ம் ஆண்டு வாங்கப்பட்டது. ரூ.50 லட்சத்தில் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டதில் ரூ.2,000 கோடி வரையில் ஆதாயம் அடைந்துள்ளதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த நிறுவனம் வாங்கப்பட்டதில் பண பரிமாற்ற மோசடி நடந்திருப்பதாக கூறி, பணம் மோசடி மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை கீழ் 2014ம் ஆண்டு அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் சோனியா, ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு விசாரணையை கடந்தாண்டு முதல் அமலாக்கத் துறை தீவிரப்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பவன் பன்சாலிடம் கடந்த ஏப்ரலில் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஜூன் 1ம் தேதி சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஜூன் 2ம் தேதி சோனியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரால் ஆஜராக முடியவில்லை. ஜூன் 8ம் தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டபோது, கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என கூறி, விசாரணைக்கு ஆஜராக 3 வாரம் அவகாசம் கேட்டார். அதை ஏற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், ஜூலை 21ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அதற்கு முன்பாக, கடந்த மாதம் 13ம் தேதி முதல் ராகுலிடம் 5 நாட்களில் 50 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.இந்நிலையில், டெல்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று காலை 11.45 மணிக்கு சோனியா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 12.30 முதல் 2.30 மணி வரை, 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு பெண் அதிகாரி உட்பட அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். பின்னர், வரும் 25ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு, அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். * திமுக, காங். உள்ளிட்ட13 கட்சிகள் கண்டிப்புகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், சிவசேனா உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டன. அதில், ‘எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு அமலாக்கத் துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டும் என்றே குறிவைக்கப்படுகிறார்கள். துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.* மூத்த தலைவர்கள், எம்பி.க்கள் கைதுசோனியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்பி.க்கள், மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் கோஷமிட்டனர். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன் நடந்த போராட்டத்தில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், தமிழகத்தை சேர்ந்த எம்பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், திருநாவுக்கரசர், செல்லக்குமார், முன்னாள் எம்பி காஞ்சிபுரம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள். நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வாகனங்களில் ஏற்றி டெல்லியின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சோனியாவிடம் விசாரணை முடிந்த பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.* சோனியா நிபந்தனைசோனியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரித்த பிறகு, விசாரணை முடிந்து விட்டதாக கூறியுள்ளனர். அதை ஏற்க மறுத்த சோனியா, ‘என்னை அலைக்கழிக்கக் கூடாது. எவ்வளவு நேரம் விசாரிக்க வேண்டுமோ விசாரித்துக் கொள்ளுங்கள். இரவு 8 மணியானாலும் ஒத்துழைப்பு தருகிறேன்,’ என தெரிவித்துள்ளார். அதை கேட்ட அதிகாரிகள், திங்கட்கிழமை விசாரணை நடத்துகிறோம் என தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.