டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறையினர் 2மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தினர். இதையடுத்து நாளைய விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜரான சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் உடல்நிலை காரணமாக அவசாகம் கேட்டதால், ஜூன் 23-ந்தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் விசாரணைக்கு ஆஜராகாமல் மேலும் அவகாசம் கோரியிருந்தார்.
தற்போது சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில், இன்று (ஜூலை21) விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி இன்று மதியம் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். விசாரணைக்கு சோனியா மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டார்- அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார்.
சுமார் 2மணி நேரம் மட்டுமே அவரிடம் விசாரணை நடைபெற்றது. அவரது உடல்நிலை காரணமாக, அவரிடம் இன்றைய விசாரணை முடித்துக்கொள்வதாக கூறிய அதிகாரிகள், நாளை (25) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் உத்தரவிட்டுள்ளனர்.