பஹத் பாசில் படம் குறித்து பரவும் எச்சரிக்கை வாசகம்
பஹத் பாஸில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள மலையான் குஞ்சு என்கிற படம் வரும் ஜூலை 22ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. சஜிமோன் பிரபாகர் என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கி உள்ளார். கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படம் கேரளாவில் அவ்வப்போது ஏற்படும் வெள்ள சேதங்கள் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் அந்த பகுதி மக்கள் எப்படி இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை மையப்படுத்தி தத்ரூபமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்த எச்சரிக்கை வாசகம் ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதாவது கிளஸ்ட்ரோபோபியா என்கிற ஒரு விதமான மூடிய அல்லது குறுகிய இடங்களுக்குள் மாட்டிக்கொண்டவர்கள் போல உணரும் விதமான பயம் கொண்டவர்கள் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க முடியுமா என தங்களை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளுங்கள். காரணம் இந்த படத்தில் அது போன்ற நிறைய காட்சிகள் இடம் பெறுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது. படத்தின் மேக்கிங் வீடியோவிலும் பஹத் பாசில் அப்படிப்பட்ட இடத்தில் சிக்கிக்கொண்டு சிரமப்படுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.