பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி எம்.பிக்களிடம் பல சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு வாக்கெடுப்பின் போதும் குறைவான ஆதரவை பெறுபவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று கடைசியாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிக எம்.பி.க்களின் ஆதரவை பெற்று இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவர் மட்டுமே களத்தில் இருந்தனர்.
தற்போது இவர்களில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். பிரிட்டன் முழுவதும் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்கட்சியின் உறுப்பினர்களிடம் இதற்கான வாக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்?
தற்போதைய நிலவரத்தை வைத்து பார்க்கும் போது, பிரிட்டன் பிரதமராக வருவதற்கு ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அது எளிதான விஷயம் அல்ல என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பிரதமராக வருபவருக்கு கட்சி எம்.பி.க்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதில் அதிக எம்.பி.க்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் ரிஷி சுனக் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் லிஸ் ட்ரஸ் உள்ளார். ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களை பொறுத்தவரை லிஸ் ட்ரஸ்ஸுக்கே அதிக ஆதரவு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றே கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM