புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு, 2021-22 நிதியாண்டில் வரி வருவாய், எதிர்பார்த்ததை விட கூடுதலாக, அதாவது 6,834.85 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது, கடந்த 2020-21 நிதியாண்டினை ஒப்பிடும் போது 43.69 சதவீதம் அதிகம் ஆகும்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார்.நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் கடந்தாண்டு ஆக., 26ம் தேதி, ரூ.9,924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அடுத்து 2022-23ம் நிதியாண்டிற்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இடைக்கால பட்ஜெட்
ஆனால், திடீரென மார்ச் மாதம் முதல்வர் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாத அத்தியாவசிய செலவினங்களுக்காக 3, 613 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கான இடைக்கால் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்திருந்தார்.தற்போது, எஞ்சியுள்ள 7 மாதங்களையும் உள்ளடக்கி முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அடுத்த ஐந்தாண்டிற்கான ஜி.எஸ்.டி., வரி வருவாய் குறித்து இன்னும் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகவில்லை.
வருவாய் இடைவெளி
ஜி.எஸ்.டி., இழப்பீடு கிடைக்காவிட்டால், புதுச்சேரி மாநிலத்திற்கு 1,300 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இடைவெளி இருக்கும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள புதுச்சேரிக்கு, இது கடும் நிதி சிக்கலை ஏற்படுத்தும்.இருப்பினும், மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை பற்றி கவலைப்படாமல், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டை உயர்த்தி அமைக்க முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார்.அதன்பேரில் அனைத்து துறைகளும் அந்த இலக்கினை நோக்கி திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து வருகின்றன.
காரணம் என்ன?
கடந்த நிதியாண்டுகளை ஒப்பிடும்போது, புதுச்சேரி அரசின் வரி வருவாய் பல மடங்காக அதிகரித்து வந்துள்ளதே, தற்போது 11 ஆயிரம் கோடியாக பட்ஜெட்டினை உயர்த்த முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.புதுச்சேரி அரசு தனது நிதி செலவினத்தை 63 சதவீதம் தனது சொந்த வருவாயில் இருந்தும், 21 சதவீதம் மத்திய அரசு மானியத்தின் மூலமும், 16 சதவீதம் வெளி மார்க்கெட்டில் கடன் வாங்கியும் சமாளித்து வருகிறது.இருப்பினும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநில வருவாய் சரிந்தது. கடந்த 2019-20ல் 4,975 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்தது. இது 2020 – 21ல் 4,757 கோடி ரூபாயாக குறைந்தது. அதாவது, 218 கோடி ரூபாய்க்கு வரி வருவாய் சரிந்தது. குறிப்பாக கலால், மின்சாரம், பத்திரப் பதிவு, போக்குவரத்து, பொதுப்பணி ஆகிய துறைகளில் வருவாய் பெருமளவு குறைந்து போனது.
வருவாய் அதிகரிப்பு
கடந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் 6,190 கோடி ரூபாயும், திருத்திய பட்ஜெட்டில் 6,529.59 ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில், திருத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைவிட 6,834.85 கோடி ரூபாய் வருவாயை எட்டியது. அதாவது, 305.26 கோடி ரூபாய் (104.68 சதவீதம்) வரி வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது.முந்தைய நிதியாண்டில் (2022-21) கிடைத்த தொகையான 4,757 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, இது 43.69 சதவீதம் கூடுதல் ஆகும்.எனவே தான், புதுச்சேரி அரசு நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டினை 11 ஆயிரம் கோடியாக, தயக்கம் இல்லாமல் உயர்த்த முடிவு செய்து, திருத்திய மதிப்பீட்டினை துறை ரீதியாக முழு வீச்சில் தயார் செய்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்