சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில், காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக்கு பின்னர், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ” 200 பேருக்கு மேல், சட்டத்திற்கு புறம்பாக தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உயர் அதிகாரியாக இருக்கக்கூடிய டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோரை பணியிலிருந்து நீக்கிவிட்டு, விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்துகிறது” என்று தெரிவித்தார்.