கொல்கத்தா: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிகிறது. முன்னதாக ஆகஸ்ட் 6-ம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் மத்தியில்பாஜக தலைமையில் ஆளும்தேசிய ஜனநாயகக் கூட்டணியின்வேட்பாளராக, மேற்கு வங்கமுன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர்நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ்உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்ததலைவர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மார்கரெட் ஆல்வா மனு தாக்கல் செய்தார். ஆனால், எதிர்க்கட்சி என்ற முறையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எந்தத் தலைவரும் அப்போது வரவில்லை. அத்துடன் வேட்பு மனுவில் கட்சி சார்பில் யாரும் கையெழுத்திடவும் இல்லை.
இதனால் அப்போதே சந்தேகம் எழுந்தது. ஜெகதீப் தன்கருக்கு, திரிணமூல் எம்.பி.க்கள் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவே கருதப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக திரிணமூல் மாநிலசெயலாளரும் செய்தித் தொடர்பாளருமான குணால் கோஷ் நேற்று கூறிய கருத்துகள் அமைந்ததால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து குணால் கோஷ் கூறியதாவது: மொத்தம் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருக்கிறதா அல்லது இல்லையா என்று கேட்கிறீர்கள். இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன.
எனவே, குடியரசு துணைத்தலைவர் தேர்தல் விவகாரத்தில் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.மேலும் ஜெகதீப் தன்கர், எங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியின் தீவிர ரசிகர். மார்கரெட் ஆல்வா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தீவிர ஆதரவாளர்.
மேலும் ஜெகதீப் தன்கர், தொடக்கத்தில் இருந்தே பாஜகவில் இருந்தவர் கிடையாது. அவர் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்திருக்கிறார். வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி இருந்த போது என்னை ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்தது என்று ஜெகதீப் தன்கரே எங்களிடம் கூறியிருக்கிறார்.
மேலும் மம்தா காயமடைந்து சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் தன்கர்.
இவ்வாறு குணால் கோஷ் கூறினார்.
இவருடைய கருத்து ஜெகதீப்தன்கருக்குதான் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என்பதை மறைமுகமாக தெளிவுப்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். அதற்கேற்ப டார்ஜிலிங் நகரில் தன்கரை, முதல்வர் மம்தா சந்தித்துப் பேசியதும் அனைவரது மனதிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, “இந்த விஷயத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிலை தெளிவாக உள்ளது. பிரதமர் மோடியை எந்த வகையிலும் கோபப்படுத்த திரிணமூல் காங்கிரஸார் விரும்பவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்தால் கட்சியினரில் பலர் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் மம்தாவின் ஒரே வேலை எதிர்க்கட்சி ஒற்றுமையை உடைப்பதுதான்” என்றார்.
மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, “இந்த விஷயத்தில் மம்தா குழப்பத்தில் இருக்கிறார். 21-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்ய கூட்டத்தைக் கூட்டியுள்ளார் மம்தா. அவருக்கு தற்போது வேறு வழியில்லை” என்றார்.