சென்னை: ஜப்பான் நாட்டில் இறந்த, சேலம் பெண்ணின் உடலை, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யவும், தாயாரிடம் உடலை ஒப்படைக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த லுாசியாவின் மகள் மரியா அன்டோனேட்டுக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர். டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து குதித்து, மனைவி தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சென்னைக்கு உடல் எடுத்து வரப்பட்டு, விமான நிலைய சரக்கு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
உடலை எடுத்து வந்து, பிரேத பரிசோதனை நடத்தி, தன்னிடம் ஒப்படைக்கும்படி, சேலம் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு உத்தரவிடக் கோரி, மரியாவின் தாய் லுாசியா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவில், ‘திருமணத்துக்கு பின் வரதட்சணை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தினார். 2022 மார்ச்சில், ஜப்பானில் சூசைராஜுக்கு வேலை கிடைத்தது.’அங்கு செல்லும்முன், என் மகள் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். என் மகள் இறந்து விட்டதாக, இம்மாதம் 3ம் தேதி சூசைராஜ் தெரிவித்தார். இயற்கையான முறையில் அவர் இறக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. மரியாவின் கணவர் சூசைராஜ் நேரில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று அவர் ஆஜராகி, மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த தனக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்தார்.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன்; போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ்; தமிழக அரசு சார்பில், கூடுதல் பிளீடர் பி.விஜய்; மருத்துவக் கல்வி இயக்குனர் சார்பில், சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி அப்துல் குத்துாஸ் பிறப்பித்த உத்தரவு:சென்னை விமான நிலைய சரக்கு பிரிவில் உள்ள உடலை, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைக்க வேண்டும்; பின், அவர், சேலம் உருக்காலை போலீஸ் நிலைய அதிகாரியிடம், உடலை ஒப்படைக்க வேண்டும்.வழக்குப் பதிவு செய்த பின், சேலம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
டாக்டர்கள் குழுவை, சேலம் அரசு மருத்துவமனை டீன் நியமித்து, பிரேத பரிசோதனை மேற்கொண்டு, போலீசாருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் நகலை, மனுதாரருக்கும், மரியாவின் கணவர் சூசைராஜுக்கும் வழங்க வேண்டும்.கணவர் முன்னிலையில், இறுதி சடங்குக்காக உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் கணவருக்கு, போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்