தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தில் இன்று முதல் (21) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளிற்கு 1500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்/வான் மற்றும் இதர வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம்பெறும்.
செவ்வாய் , சனி – 0,1, 2 இலக்கத்திற்கும்,
வியாழன், ஞாயிறு- 3, 4, 5 மற்றும்
திங்கள்,புதன், வெள்ளி ஆகிய தினங்களில் 6,7,8,9 ஆகிய இறுதி இலக்க வாகனங்களுக்கும் விநியோகிக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக QR code முழுமையாக அமுல்படுத்தப்படும்வரையில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
எரிபொருள் விநியோக அட்டையில் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு மேலதிகமாக ஏதேனும் ஒரு எரிபொருள் நிலையத்தில் அவ் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் விநியோகிக்கப்படும்.
யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையம் அத்தியாவசிய தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொதுமக்கள் இது தவிர்ந்த ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கும் , பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை சாலைகள் ஊடாக தொடர்ந்து வழமைபோன்று டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.