வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நம் எல்லோருக்கும் தரையில் இருந்தே எல்லாவற்றையும் பார்த்தும் அளந்தும் பழக்கம்.
அருகில் இருந்தும் கொஞ்சம் தூரத்தில் இருந்தும் பார்த்து நம் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் கணித்து நம்மை துன்புறுத்திக் கொள்கின்றோம்.
அதையே கொஞ்சம் மேலே நின்றோ கீழே நின்றோ பார்த்தால் நம் கணிப்பு வேறுபட்டு அமைதி கிடைக்கலாம்.
போன வருடம் ஹெலிகாப்டரில் பயணிக்கும் சந்தர்ப்பம் ஒன்று வந்தது.
முதல் அனுபவம். ஆகவே ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.
ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு போன போது எல்லாமே பிரமிப்பாக இருந்தது.
வீட்டில் இருந்து வானத்தை பார்க்கும் போது ஹெலிகாப்டர் சிறியதாகத் தெரியும்.
ஆனால் அருகே பார்த்த போது கொஞ்சம் பெரியதாக தெரிந்தது. ( அதனால் புரிவதென்னவென்றால் எதையும் தள்ளி நின்று பார்த்து பழகினால் கழ்ட்டம் பெரிதாக தெரியாது என எனக்கு சொல்லிக் கொண்டேன்)
மனதிற்குள் ஒரே குதூகலம். ஹெலிகாப்டரில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். அது பறக்கும் முன் என் மனது வானத்திற்குப் போய் விட்டது.
ரொம்பதான் ஆடுகிறாய் என்றது உள்மனது. வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
ஹெலிகாப்டர் பறக்க ஆரம்பித்தது. மேலே மேலே போயிற்று.
கீழ் இருந்த மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தார்கள். சில நிமிடங்களில் மறைந்ததே போனார்கள்.
பெரிய கட்டிடங்கள் சிறியதாக தெரிந்தது. ஹெலிகாப்டர் இன்னும் மேலே போயிற்று.
நான் வானத்தின் மேலே அதே உருவத்தில். ஆனால் கீழே எல்லாம் கடுகு போல் சிறியதாக காட்சி அளிக்கிறதே? ஏன்?
இடைவெளி அதிகமாக அதிகமாக கண்கள் காண்பது வேறாகி விடுகிறது.
குற்றம் காணின் சுற்றம் இல்லை.
நம் உறவிடமும் நாம் குற்றம் காணாமல் மேலே மேலே பறந்து போய் பார்த்தால் அது நம் கண்களுக்கு தெரியாதல்லவா? என்று நினைத்துக் கொண்டேன்.
கடவுளும் இன்னும் மேலே இருந்து பார்ப்பதால்தான் நம்மைப் பற்றித் தெரியாமல் நமக்கு அவர் அருளை அள்ளி தருகின்றாறோ?
விநோதமான மனது, நிலத்தில் இருந்து கொண்டு நம்மை என்ன பாடு படுத்திக் கொண்டிருக்கிறது?
நம் மனதை அவ்வப்போது ஹெலிகாப்டரில் ஏற்றி விட வேண்டும். நம்முள் அன்பு ஊறுமல்லவா? ஆசைதான் என்கிறீர்களா? நல்ல ஆசை தானே?
வானில் போனபோது இந்த புத்தி வந்ததா எனக்கு… பின்னர் கடலுக்குள் போனேன்.
என்ன ஆயிற்று தெரியுமா?
நீச்சலே தெரியாத எனக்கு கடலின் கீழே இருக்கும் பவள பாறைகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. விட்டு விடுவேனா என்ன?
மூன்று நான்கு உடுப்புகளை போட்டு விட்டார்கள். கண்ணுக்கு கண்ணாடி மாட்டி விட்டார்கள். தலை கவசம் போட்டார்கள்.
எல்லாவற்றையும் போட்டு கொண்ட பின்னர் கடலின் கீழே கீழே அழைத்துச் சென்றார்கள்.
கால் தரையில் பரவவில்லை. ஆனால் நடந்து கொண்டே பவள பாறைகளை பார்த்தேன். கண் கொள்ளா காட்சி அது.
ஆனால் மனது சும்மா இல்லை. ஆழி மழை கண்ணன் வந்து உட்கார்ந்து விட்டான். அய்யோ இங்கே தானே அரவணை மேல் பள்ளி கொண்டு நம்மை காக்கின்றான் என்று கூப்பாடு போட்டது.
நம் கண்களுக்கு தெரியாத பெரிய உலகமே கடலினுள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பெரிய மீன்கள். குட்டியான மீன்கள். வண்ணங்கள் பல பல. விதவிதமான உருவங்களில் பல உயிரினங்கள்.
பெரிய உலகமே தரையின் கீழே வாழ்ந்து கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கின்றது.
அங்குள்ள உயிரினங்கள் தான் உயிர் வாழவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தினமும் போராடிக் கொண்டே இருக்கின்றன.
தரை மேல் இருக்கும் நமக்குத் அது பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. நமக்குத் தெரியாததால் மற்றவர்களுக்கு போராட்டமே இல்லையா என்ன?
நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து நினைத்து தவறான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு என்ன வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது…
நம்மைப் பற்றி நினைப்பது ஒன்றும் தவறில்லை. நினைக்க வேண்டும். ஆனால் சுற்றி இருப்பதையும் இருப்பவர்களையும் பார்த்து நம்மை மனதளவில் வளர்த்துக் கொண்டு ஆனந்தமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
வானம் எதையும் பெரிது படுத்தாதே என்று சொல்லி கொடுத்தது.
கடல் தரையை விட போராட்டமான மற்றொரு உலகும் இருக்கிறது.
நீ மட்டும் போராட பிறக்கவில்லை என்றது.
இயற்கை நம் முன் இருக்கும் கொடை. குரு. இல்லையா??
அன்புடன்
மாலா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.