கொல்கத்தா: வேலையில்லா திண்டாட்டத்தை போக்க ‘பக்கோடா’ போடலாம் என்று மோடியும், ‘பஜ்ஜி’ சுடலாம் என்று மம்தாவும் கூறியது பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் இவர்களது கருத்துக்கு ஆதரவாக ஆய்வு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், நாட்டில் வேலையின்மைப் பற்றி பேசுகிறார்கள். இளைஞர்கள் ‘பக்கோடா’ விற்பனை செய்தால்கூட நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அந்த வருமானத்தையே வேலைவாய்ப்பாகக் கருத வேண்டும்’ என்று கூறியிருந்தார். மோடியின் இப்பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘மோடி பக்கோடா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் ‘சாப்’ என்று அழைக்கப்படும் பஜ்ஜி விற்று ஒருவர் தனது வாழ்க்கை தரத்தை மாற்றியது குறித்து பேசினார். மேலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவதில், பஜ்ஜி தயாரிப்பதைக் கூட ஒரு தொழிலாக மாற்றலாம் என்று கூறினார். இவரது பேச்சும் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களால் கேலி கிண்டல் செய்யப்பட்டன. இருப்பினும், பஜ்ஜி சுட்டு விற்பது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை ராய்கஞ்ச் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் தபஸ் பால் மற்றும் அவரது மாணவர் கானா சர்க்கார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தபஸ்பால் கூறுகையில், ‘பஜ்ஜி சுட்டு விற்பதை லாபகரமான ெதாழிலாக மாற்ற முடியும். நாட்டில் டீ விற்றவர் பிரதமராக இருக்கும் போது, நாம் அனைத்து தொழில்களையும் மதிக்க வேண்டும். உணவுத் துறையில் பெரும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், கிராமப்புற சகோதர சகோதரிகள் பஜ்ஜி தயாரிக்கும் விற்பதை ஏன் ஊக்கப்படுத்தக் கூடாது. மம்தா கூறிய கருத்தால் பஜ்ஜி தொழில் குறித்து ஆய்வு நடத்தவில்லை. சமூகப் பிரச்னைகளை மையமாக கொண்டே ஆய்வு நடத்தினேன். கடந்த காலங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளிகள், ரிக்ஷா ஓட்டுனர்கள், பழங்குடி சமூகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளேன். மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்து பகுதியில் 23 குடும்பங்கள் பஜ்ஜி சுட்டு விற்று சராசரியாக மாதம் ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை வருமானம் ஈட்டுகின்றன. கொரோனா காலங்களில் பலர் வறுமைக்கு தள்ளப்பட்ட போது, இதுபோன்ற சிறு தொழில்கள்தான் அவர்களின் வாழ்க்கையை ஓடச் செய்தது. எனது ஆராய்ச்சியின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்ப உள்ளேன். பஜ்ஜி தொழிலை ஊக்குவிக்க அரசுகள் உதவ வேண்டும். இந்த தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்குள் கொண்டு வர வேண்டும்’ என்றார்.