ஹார்ட் டிரைவை கைப்பற்றிய புலனாய்வு குழு! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவிழுமா மர்மமுடிச்சு?

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்கள் கையில் ஹார்ட் டிரைவ் கிடைத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முழு உண்மைகளும் தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவினரை குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார்.
image
இதனையடுத்து சேலம் டிஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 6 டிஎஸ்பிக்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் க்ரைம் போலீசார் என 18 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். டிஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையிலான இந்த குழுவினர் சின்னசேலம் தனியார் பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறக்க விட்டு கலவரம் நடந்த பகுதி பருந்து பார்வையில் பதிவு செய்யப்பட்டது.

மேலும் பள்ளி வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் எரிக்கப்பட்ட பள்ளி பேருந்துகள் மற்றும் காவல் துறை வாகனம் ஆகியவற்றை பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களிடம் இதுவரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். எரிக்கப்பட்ட பொருட்களை ஆய்வு மேற்கொண்ட போது அங்கு ஒரு ஹார்ட் டிரைவ் (HARD DRIVE) கண்டெடுக்கப்பட்டது. எரிக்கப்பட்டதில் அது சேதமடைந்ததா அல்லது சேதமடையவில்லையா என்பது முறையான சோதனைக்கு பின்னரே தெரியவரும்.

இதனிடையே கலவரம் நடந்த பகுதியில் இருந்து கலவரம் நடந்த தினத்தன்று பயன்படுத்தப்பட்ட செல்போன் பதிவுகளை கண்டறிந்து அதன் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகளும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் வரை டிஐஜி தனியார் பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.