என் வயது 47. வயதுக்கு மீறிய உடல் பருமனுடன் இருக்கிறேன். எடையைக் குறைக்கச் சொல்லி பலரும் அறிவுறுத்துகிறார்கள். மெனோபாஸ் வருவதற்கு முன் எடையைக் குறைக்காவிட்டால் பிறகு எடையைக் குறைப்பது மிகவும் சிரமம் என்கிறார்களே… அது உண்மையா? எடைக்குறைப்புக்கு வயது முக்கியமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
மெனோபாஸ் வருவதற்கு முந்தைய நிலையை ‘பெரி மெனோபாஸ்’ என்கிறோம். அப்போதிலிருந்தே மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். மூன்று மாதங்களுக்கொரு முறை, ஆறு மாதங்களுக்கொரு முறை என மாதவிடாய் தள்ளிப் போகலாம். இரவில் நல்ல உறக்கம் இருக்காது. உடல் சூடாகும், வியர்க்கும். ஹார்மோன் தொந்தரவுகள் நிறைய இருக்கும்.
இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு தீவிரமாகவும் சிலருக்கு மிகக் குறைவாகவும் இருக்கலாம். அந்த வயதில் மிகக் குறைவான அளவுதான் சாப்பிடுவார்கள். ஆனாலும் உடனே எடை அதிகரிப்பதாகச் சொல்வார்கள். இடுப்பைச் சுற்றியும், வயிற்றைச் சுற்றியும் சதைபோடும்.
தன் உடலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தவிப்பார்கள். இந்த அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் ஹார்மோன் தொந்தரவுதான். உங்களுக்குச் சொல்லப்பட்ட அட்வைஸ் மிகச் சரியானதுதான். அதாவது பெரிமெனோபாஸ் காலத்தில் அல்லது அதற்கு முன்பே எடையைக் குறைப்பதுதான் சுலபம்.
அதற்காக மெனோபாஸுக்கு பிறகு எடையைக் குறைக்கவே முடியாது என்று அர்த்தமில்லை. ஆனால் அந்தப் பருவத்தில் எடைக்குறைப்பு முயற்சிக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு மெனக்கெடல் தேவைப்படும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்தாலும் அதைச் செய்ய முடியாதபடி உடல் உபாதைகள் படுத்தும். பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும். இரவில் சரியான தூக்கம் இருக்காது. காலையில் தாமதமாக எழுந்திருப்பார்கள். உடற்பயிற்சி செய்யும் உத்வேகம் வராது. அதற்கான எனர்ஜியும் இல்லாதது போல உணர்வார்கள்.
எனவே மெனோபாஸுக்கு முன்பே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் எடையைக் குறைக்க ஆரம்பித்துவிடுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.