குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று இந்தியாவின் 14ஆவது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெற்றது. டெல்லி செல்ல முடியாத எம்.பி.க்கள் அந்தந்த சட்டமன்றங்களில் வாக்களித்தனர்.
வாக்களிக்க தகுதி பெற்ற, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் உறுப்பினர்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்தினர். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும், நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்ட நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றாம் சுற்று நிலவரப்படி, 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற திரௌபதி முர்மு நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், திரௌபதி முர்முவுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 15 எம்.பி.க்கள் அளித்த வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் கட்சி மாறிதிரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 104 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தமட்டில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அந்தந்த கட்சியின் கொறடாக்கள் உத்தரவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.