சென்னை: அதிமுக தலைமைநிலையம் மோதல் தொடர்பாக ஈ.பி.எஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது சென்னை காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11ந்தேதி, ஓபிஎஸ் முன்னலையில், அவரது ஆதரவாளர்களால், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு வன்முறை நடத்தப்பட்டது. இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில், இறுதியில் வன்முறையை கட்டுப்படுத்தினார். இந்த கலவரம் தொடர்பாக இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர் என பலர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஏற்கனவே அதிமுக அலவலகத்துக்கு தமிழகஅரசு சீல் வைத்தது தொடர்பான வழக்கில், காவல்துறை சமர்ப்பித்த வீடியோவை பார்த்து, சிரித்த நீதிபதி, காவல்துறை யினரின் நடவடிக்கையும் விமர்சித்தார். இந்த நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களான தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 11பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல் மற்றும் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்ததாகவும், ஆனால் இந்த வழக்கில் தாங்கள் தவறாக இணைக்கபட்டுள்ளதாக மனுவில் தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி விடுமுறை என்பதால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி தங்க மாரியப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கபட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அதுவரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை கைது செய்ய கூடாது என ராயப்பேட்டை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.