புதுடெல்லி: அமலாக்கத்துறை விசாரணை குறித்து 13 எதிர்க்கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. அப்போது, விசாரணை அமைப்புகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பூஜ்ய நேர நோட்டீஸை ஆம் ஆத்மி கட்சி வழங்கியது.
சோனியா காந்தி குடும்பத்தை காப்பாற்ற, வீண்பிடிவாதமாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் என பாஜக விமர்சித்துள்ளது. “காங்கிரஸ் கட்சி குடும்ப இயக்கமாக மாறிவிட்டது. தற்போது அதன் சொத்துகளும் குடும்பசொத்துகளாகிவிட்டன” என்று பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பேட்டியில், “விசாரணை அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதால், ஜனநாயகம் அபாயத்தில் உள்ளது. நாட்டை காக்க போராடுகிறோம். எங்கள் இடத்தில் பாஜகவினர் இருந்திருந்தால் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பர்” என்றார்.