இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார்.
அவர் கடைசியாக 3 வருடத்திற்கு முன்பு சதம் அடித்தார். விராட் கோலியை இந்திய அணி முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
விராட் கோலிக்கு இது ஒரு கடினமான காலம் என்பதை நான் அறிவேன். அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. எந்த ஒரு வீரராக இருந்தாலும், அது பந்து வீச்சாளராகவும் அல்லது பேட்ஸ்மேனாகவும் இருந்தாலும் அவர்களும் இந்த நிலைமையை கடந்து ஆக வேண்டும். விராட் கோலிக்கும் அது சீக்கிரம் நிகழும் என நம்புகிறேன்.
நான் எதிரணி வீரராகவோ அல்லது கேப்டனாகவோ இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறேன் என்றால் விராட் கோலி இல்லாத அணியை விட, அவர் பிளேயிங் லெவனில் இருக்கும் அணியை பார்த்து தான் நான் அச்சம் கொள்வேன். அது தான் விராட் கோலி ஏற்படுத்தி இருக்கிற தாக்கம் என்று கூறினார்.
மேலும், உலகக்கோப்பை நடைபெறும் இந்த காலத்தில் விராட் கோலியை அணியை விட்டு நீக்கி வேறு ஒருவரை அணிக்குள் கொண்டு வந்தால் மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்புவது கடினமாகும். நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கு அவருடைய நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன்.
நான் அவரிடம், ‘இது உங்கள் இடம், இங்குதான் நீங்கள் பேட்டிங் செய்கிறீர்கள், இது மாறப்போவதில்லை. உங்களை நம்பிக் கொண்டே இருங்கள், கடின உழைப்பில் ஈடுபடுங்கள், பல ஆண்டுகளாக உங்களை உலகின் சிறந்த வீரராக மாற்றியதை நம்புங்கள் – அந்த எண்ணங்களுக்குத் திரும்புங்கள், ரன்கள் வரும், ” என்று கூறுவேன் என்றார்.
விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் ஃபார்மில் இல்லை என்றால் கூட அவரை விளையாட வைக்க வேண்டும். அப்போதுதான் லீக் சுற்றுகளில் விராட் கோலி ஓரளவுக்கு உத்வேகத்தை பெற்று நாக் அவுட் சுற்றுகளில் எரிமலை போல் வெடித்து அணிக்காக சிறந்து விளையாடுவார் என்றும் கூறியுள்ளார்.