கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக, தினேஷ் குணவர்த்தனே, 72, பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, பார்லி., எம்.பி.,க்கள் ஆதரவுடன் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த, தினேஷ் குணவர்த்தனே, புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த, தினேஷ் குணவர்த்தனே, ராஜபக்சே சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சியில், கல்வி அமைச்சராக பணியாற்றியவர். வெளிப்படையாக பேசும் இயல்புள்ள தினேஷ் குணவர்த்தனே, கடந்த 2015 – 19 வரை இலங்கை பிரதமர்கள் மைத்ரிபாலா சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தவர்.தற்போது, ரணில் விக்ரமசிங்கேவின் கீழ் பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். தினேஷ் குணவர்த்தனேவின் பெற்றோர், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
17 அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையிலான அரசில், டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரன் உள்ளிட்ட, 17 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தினேஷ் குணவர்த்தனே கூடுதலாக, பொது நிர்வாகம், உள்துறை விவகாரம், மாகாண கவுன்சில்கள் மற்றும் உள்ளாட்சி துறைகளை கவனிப்பார். முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதர அமைச்சர்களுக்கு முன்பு வகித்த பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நிதியமைச்சகத்திற்கும் பொறுப்பேற்றுள்ளார்.
9 பேர் கைது
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தை நோக்கி நேற்று ஏராளமானோர் திரண்டு வந்தனர். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அதிபர் செயலகத்தின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டது. ஏராளமான ராணுவத்தினர், அதிபர் செயலகத்திற்கு போகும் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement