உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டம் ஜாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார் யாதவ். இவர் அந்தப் பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். கடந்த 16-ம் தேதி அவர் வசிக்கும் பகுதியில் `சம்பூர்ண சமாதான் திவஸ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமித் குமார், அங்கு வந்திருந்த தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “மழை இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்திர பகவான்மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று சுமித் குமார் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை தாசில்தார் படிக்காமலே மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புகார் மனுவில் தாசில்தாரின் கையொப்பம், அதிகாரபூர்வ முத்திரை மற்றும் `அடுத்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது’ என்ற குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது இந்தப் புகாரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. மாவட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
விவசாயிகள் மழைக்காக கடவுளிடம் வேண்டி பல்வேறு சடங்குகளை செய்வது வழக்கம். ஆனால் விவசாயி ஒருவர் அதிகாரிகளிடம் வருண பகவான் புகார் அளிக்கும் அளவுக்கு சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.