வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-இந்தியா, சீனா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதிக்கு அருகே, சீனா புதிய கிராமத்தை அமைத்து வரும் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
‘நாட்டின் பாதுகாப்பை கவனத்தில் வைத்து, அந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என, வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.கடந்த 2017ல் சீனா, இந்தியா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனாவும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.அங்கு சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினரை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், டோக்லாம் அருகே, 9 கி.மீ., தொலைவில் பூடானுக்கு சொந்தமான பகுதியில் கிராமங்களை அமைக்கும் பணியில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக கடந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது.பாங்டா என பெயர் சூட்டப்பட்ட இந்த கிராமத்தில் மக்கள் தற்போது முழுமையாக குடியேறி உள்ளனர். பெரும்பாலான வீட்டு வாசல்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:நம் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அங்கு நடந்து வரும் அனைத்து முன்னேற்றங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நம் நாட்டின் எல்லை மற்றும் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement