அதிமுக-வில் ஒற்றைத்தலைமை விவகாரம் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக-வைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள இத்தகைய மோதல் போக்கு தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி சிறப்புப் பொதுக்குழுவை நடத்தினார். இந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், அதே பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய போக்கிற்குச் சற்றும் சளைக்காத ஓ.பன்னீர்செல்வம் இதற்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மேலும் 44 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கினார்.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்தச்சூழலில், கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் கவச உடை அணிந்து வாக்களித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓ.பி.எஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் வீடு திரும்பிய பின்னர் எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஓ.பி.எஸ்-க்கு நெருங்கிய முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
“ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். இதையடுத்து, அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் கிழமைகளில் புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த லிஸ்ட்-ஐ வெளியிட உள்ளார். ஏற்கனவே, எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த 66 பேரை நீக்கியுள்ளோம். இதில், பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்கள் தான். அதன்படி புதிய மாவட்டச் செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம்m நியமிக்க உள்ளார். இதற்கு அடுத்தபடியாக பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.