அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் உட்பட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கிடையில், அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி-யாக இருக்கும் ரவீந்திரநாத்தையும், “ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இனி அவர் அ.தி.மு.க எம்.பி இல்லை” என மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ரவீந்திரநாத் மீதான இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “அ.தி.மு.க-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கட்சியின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, எடுத்த தவறான முடிவுகளால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்.
இந்த சூழ்நிலையில், கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க-வின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கழகத் தொண்டர்கள் ஒரு நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்கமாட்டார்கள்.
இவர்களது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கழகத் தொண்டர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். அதாவது, இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். இவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. இதை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாகப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என சசிகலா குறிப்பிட்டிருந்தார்.