கரூர், காந்திகிராமம் கிழக்கு, அமராவதி நகரில் வசித்து வந்தவர் முகமது பரீத் (46). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு, நஸ்ரின் பானு என்ற மனைவியும், ஜூஹினாச் (16) என்ற மகளும் இருக்கின்றனர். இவர், தான் குடியிருக்கும் வீட்டை அரசு வங்கியிலும், கூட்டுறவு வங்கியிலும் கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடன் சுமையால் அவதிப்பட்ட அவர் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கடனை கட்டமுடியாமல் தத்தளித்த அவர், தன் குடும்பத்தினரோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, முகமது பரீத் தன் மனைவி, மகளுக்கு தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் சல்பர் மாத்திரையை கரைத்து கொடுத்ததோடு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தகவலறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மகள் ஜூஹினாச் உயிரிழந்தார். பரீத், அவர் மனைவி நஸ்ரின் பானு இருவரின் உடல் நிலைமை மோசமாக இருந்ததால், அவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து முகமது பரீத்தையும், அவர் மனைவியையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே முகமது பரீத் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மனைவி நஸ்ரின் பானு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருக்கிறார். உயிரிழந்த முகமது பரீத், அவர் மகளின் உடல்கள் உடற்கூறாய்வு செய்வதற்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முகமது பரீத், மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரையின் உதவியாளர் சாதிக் என்பவரின் சகோதரர் என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.