கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமாக இறந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பாகப் பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வாகனங்களுக்குத் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3,500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகுமென சொல்கிறார்கள். அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 13ஆம் தேதி காலை பள்ளி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி நிலையில். ஜூலை 12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி படிப்பு அறையிலிருந்து வெளியே வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவி இரவே உயிரிழந்தாரா? அல்லது காலையில் உயிரிழந்தாரா? என்கிற குழப்பத்திற்கு உடற்கூராய்வு அறிக்கை வெளியாகும் போது தெரியும் என்கிறார்கள்.
இதற்கு முன், ‘உயிரிழந்த மாணவி ஸ்டடி டைம் முடிந்து அவரின் அறைக்கு மேலே போகுவதிலிருந்து, காலை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகும் வரை உள்ள சி.சி.டி.வி காட்சிகள் காவல் துறையிடம் கொடுத்துவிட்டோம். இதில் எல்லா கேமராக்களும் ஆன் கண்டிஷனில் தான் இருந்தது. அதிலிருந்து கிடைத்த எல்லா ஃபூட்டேஜும் காவல் துறையில் கொடுத்துவிட்டோம்’ என்று பள்ளியின் செயலாளர் சாந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு கொண்டு போது, “பள்ளியின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு சிறு விளக்கமாக இந்த காட்சியினை பள்ளி தரப்பில் வெளியிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இப்போது சி.பி.சி.ஐ.டி மற்றும் சிறப்பு அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும்” என்கிறார்கள்.