இன்று கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள அவரின் பெற்றோருக்கு உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தடவியல் நிபுணர் உடல் கூறாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, “நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில், “கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள். அமைதியாக தீர்வு காண வேண்டும்.
மேலும், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு “கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை விரைந்து நடத்துங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, நாளை தங்களது மகளின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூர், பெரியநெசலூரில் நாளை நடைபெறும் கள்ளகுறிச்சி பள்ளி மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது என்று, மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ஒலிப்பெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.