திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரணி தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காவடி மற்றும் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேரத்தி கடனை செலுத்தினர். ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான ஆடி பரணி இன்று அதிகாலை தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிவப்பு, மஞ்சள் ஆடை அணிந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள், சரவண பொய்கை மற்றும் நல்லான் குளத்தில் நீராடிவிட்டு மலை படிக்கட்டு வழியாக நடந்து மலை கோயிலுக்கு வந்தனர். அங்கு, நீண்ட வரிசையில் நின்று நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் மலர், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மலையடிவாரத்தில் இருந்து மலை கோயில் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக திருத்தணி-சித்தூர் சாலையில் உள்ள முருகூர் பகுதியிலும், சென்னை-திருப்பதி தேசிய ெநடுஞ்சாலை பட்டாபிராமபுரம் மற்றும் தரணிவராகபுரம் ஆகிய பகுதிகளிலும், அரக்கோணம் சாலையில் உள்ள பேருந்து பணிமனை அருகே என 3 இடங்களில் தற்காலி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. பஸ், கார், உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், இந்த இடங்களில் நிறுத்தி விட்டு நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.விழாவின், முக்கிய நிகழ்ச்சியான கிருத்திகை நாளை நடக்கிறது. மாலையில் முதல்நாள் தெப்ப நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி 2வது நாள் தெப்ப நிகழ்ச்சியும், 25ம் தேதி 3வது நாள் தெப்ப நிகழ்ச்சியும் நடக்கிறது. மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் இந்த தெப்பல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.