சென்னை: பருவ மழையின் காரணமாக அதிகரிக்கும் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தெருத் தெருவாக புகைப் பரப்பும் பணி, சென்னையில் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது.
தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னையில் ஒரு சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொசுப்புழுக்களின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல்வேறு நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.
மேலும், மழைக் காலத்திற்கு முன்பாக சென்னையில் கொசுக்களின் பெருத்தகத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி, சென்னையில் நாளை முதல் தெருத் தெருவாக புகைப் பரப்பும் பணி தொடங்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த 15 மண்டலங்களுக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை முதல் தினந்தோறும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இரண்டு வேளை கொசுப் புகைப் பரப்பும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், நாளை காலை 11.30 மணி அளவில் 200 வார்டுகளிலும் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் உதவியோடு வீடு வீடாக சென்று அப்புறப்படுத்தப்படவுள்ளன.