தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி(59). இவர், `தனது மனைவி பெயரில் உள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக’ ஓ.பி.எஸ்-ன் சகோதரரும், தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜா மீது இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், `திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் தனது மனைவி சந்தானலட்சுமியின் பெயரில் 1ஏக்கர் 83 சென்ட் நிலம் உள்ளது. அதனை எனது மகளின் திருமணத்திற்காகவும், குடும்ப தேவைக்காகவும் விற்க முடிவு செய்த நிலையில், கடந்த 2010 ஆண்டு ஓ.பி.எஸ் சகோதரர், ஓ.ராஜா கிரயம் செய்து கொள்வதாக பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மூலம் தொடர்பு கொண்டனர்.
பின்னர் நிலத்தை ரூபாய் 40 லட்சத்திற்கு கிரையம் பேசி அதற்கான பணத்தை 3 மாதத்தில் கொடுப்பதாக தெரிவித்தனர். அதனை உண்மை என நம்பி கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதியன்று ஓ.ராஜாவின் உறவினரான பெரியகுளம் கிருஷ்ணன் பெயருக்கு பொது அதிகாரம் என்றழைக்கப்படும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தோம்.
ஆனால் பேசியபடி பணத்தை தராமலும், நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை வைத்து பெரியகுளம் தென்கரையை சேர்ந்த விஜயகுமார் என்பவரது பெயருக்கு பெயரளவில் கிரயப் பத்திரம் எழுதியும் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை ரத்து செய்து தாருங்கள் அல்லது எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் ரூபாய் 40 லட்சத்தை தருமாறு கேட்டதற்கு, தரமறுத்த ஓ.ராஜா கொலை மிரட்டல் விடுத்தார்.
அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்தோம். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டும், ஓ.பி.எஸ் மற்றும் ஓ.ராஜாவின் அரசியல் செல்வாக்கால் கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மோசடி செய்து அபகரிக்கப்பட்ட எங்கள் நிலத்தை மீட்டுத்தருமாறும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்ற ஓ.ராஜா, கிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 3பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முனியாண்டியின் வழக்கறிஞர் தேவராஜனிடம் பேசினோம். “இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒ.ராஜாவுக்கு உறவினர்கள் தான். இப்போது அபகரித்த இடத்தை வேறு நபருக்கு விற்க முயற்சிகள் நடந்து வருகிறது. தாங்கள் இழந்த நிலத்தை மீட்டெடுக்க முடியாது என நினைத்திருந்த முனியாண்டியிடம், ஒ.ராஜா தரப்பினர் 5 லட்ச ரூபாயைக் கொடுத்து சில டாக்குமென்ட்களில் கையெழுத்திடக் கோரியுள்ளனர். அப்போது தான் நிலத்தை மீட்க இன்னும் கொஞ்சம் வழியிருப்பதாக அறிந்து மீண்டும் புகார் அளித்துள்ளனர். தற்போது அளித்துள்ள மனுவை விசாரிக்க போலீஸார் முன்வந்துள்ளனர்” என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க ஒ.ராஜாவின் எண்ணை தொடர்புகொண்டோம் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விளக்கம் தரும் பட்சத்தில் அதனையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.