கோயில்களில் ஆடி மாத திருவிழா களை கட்டியுள்ள நிலையில், ஓசூர் சாமந்திப்பூவுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், வரும் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலர் உற்பத்திக்கு சாதகமான குளிர்ந்த தட்ப வெட்ப நிலை மற்றும் மண்வளம் உள்ளது. இதனால், இப்பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் வரவேற்பு: இங்கு அறுவடை செய்யப்படும் சாமந்திப்பூ சென்னை, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. குறிப்பாக பெங்களூரு மலர் சந்தைக்கு அதிக அளவில் விற்பனைக்கு செல்கிறது. மேலும், கோயில் திருவிழாக்கள், பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகளில் அலங்காரம் உள்ளிட்டவைகளுக்கும் சாமந்திப்பூவின் தேவை அதிகம் உள்ளது. தற்போது, கோயில்களில் ஆடி மாத திருவிழாக்கள் களை கட்டியுள்ள நிலையில் சாமந்திப்பூவின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும், வரும் மாதங்களில் விநாயகர்சதூர்த்தி, ஆயூதபூஜை, விஜயதசமி, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகை மற்றும் கோயில் திருவிழாக்கள் வருவதால் சாமந்திப்பூவுக்கு தொடர்ந்து வரவேற்பு இருக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நல்ல விலை: இதுதொடர்பாக ஓசூர் உதவி தோட்டக்கலை அலுவலர் சுப்பிர மணியன் கூறியதாவது: நடப்பாண்டில் ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. மேலும், மலர் சாகுபடிக்கு சாதக மான குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை உள்ளதால் சாமந்திப்பூ மகசூல் இருமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, சாமந்திக்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.